search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி விமானம்"

    துருக்கி வந்த விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் நடுவானில் குழந்தை பெற்றெடுத்தார். விமான ஊழியர்கள் உதவியுடன் அவரது கணவரே பிரசவம் பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. #TurkishAirlinesFlight
    இஸ்தான்புல்:

    ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் கேபோன் குடியரசு என்ற நாடு உள்ளது.

    இந்த நாட்டின் தலைநகரம் லிபர்வில்லேவில் இருந்து துருக்கி விமானம் ஒன்று துருக்கி தலைநகரம் இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.

    இடையில் காங்கோ நாட்டில் உள்ள கின்சசா நகரில் தரை இறங்கி பயணிகளை ஏற்றியது. அப்போது அந்த நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் முசும்பா (வயது 21). தனது கணவருடன் இஸ்தான்புல் வருவதற்காக விமானத்தில் ஏறினார்.

    விமானம் புறப்பட்டு 3 மணி நேரம் பயணம் செய்த நிலையில் நைஜர் நாட்டிற்கு மேலே 13 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது முசும்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது பற்றி விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் இஸ்தான்புல் சென்றடைய மேலும் பல மணி நேரங்களாகும்.

    எனவே வேறுவழி இல்லாததால் விமானத்திலேயே முசும்பாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. முசும்பாவின் கணவர் டாக்டர் ஆவார்.

    எனவே விமான ஊழியர்கள் உதவியுடன் அவரே மனைவிக்கு பிரசவம் பார்த்தார்.

    இதற்காக விமானத்தின் பின் இருக்கை பகுதிகள் காலி செய்யப்பட்டு தனி இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு வைத்து பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் முசும்பா ஆண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. தாயும் நல்ல நிலையில் இருந்தார்.

    விமானத்தில் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் விமான ஊழியர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினார்கள். விமானத்தில் வைத்தே அந்த குழந்தைக்கு பென்னல் என்று பெயரிடப்பட்டது.

    குழந்தை பிறந்ததற்கு பிறகும் 4 மணி நேரம் விமானம் பயணம் செய்து இஸ்தான்புல் நகரை அடைந்தது. அதற்கு முன்பே விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ்சுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறி இருந்தனர்.

    விமானம் தரை இறங்கியதும், தாயையும், குழந்தையும் ஏற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    துருக்கி விமானங்களில் கடந்த 28 ஆண்டில் 5 குழந்தைகள் பிறந்து இருந்தன. இப்போது பிறந்தது 6-வது குழந்தையாகும்.

    கடந்த ஆண்டும் துருக்கி விமானம் ஒன்றில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. #TurkishAirlinesFlight
    ×